‘ஹாய்’ பட கதை நயன்தாராவை மனதில் வைத்து தான் எழுதினேன் – இயக்குனர் விஷ்ணு எட்வின்!

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன், தற்போது நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பாக்யராஜ், ராதிகா, பிரபு, சத்யன், குரேஷி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் லலித்குமார், ஜீ ஸ்டூடியோவுடன் இணைந்து நயன்தாராவுடன் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் குறித்து விஷ்ணு எடவன் கூறுகையில், “எனக்கு உணர்ச்சிபூர்வமான ‘பீல்குட்’ வகை திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். ‘யாரடி நீ மோகினி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்தப் படமும் அதேபோன்ற உணர்வை தரக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தப் படத்தின் கதையை நயன்தாராவை மனதில் வைத்து எழுதியேன். கதையை கேட்டவுடன் அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். தலைப்பு எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறிய ஆலோசனையின் அடிப்படையிலேயே ‘ஹாய்’ என்ற பெயர் உருவானது. இந்தச் சொல் கதையுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்கொருவர் ‘ஹாய்’ சொல்லாமல் இருக்க முடியாது என்பதால், அது அனைவரின் வாழ்க்கையுடனும் தொடர்புடையது” என்றார்.

மேலும், “நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் தேர்வு செய்யப்பட்டதற்கு பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அதே சமயம், நயன்தாரா மற்றும் கவின் இடையேயான காதல் தான் கதையின் மையமாக அமைகிறது. பொதுவாக நயன்தாராவுக்கு ஜோடியாக முன்னணி நடிகர்களை தான் நாம் எதிர்பார்ப்போம். ஆனால் இதில் புதுமுகத் தன்மையும், அனைவருக்கும் பரிச்சயமான முகமும் வேண்டும் என்பதால் கவின் தேர்வு செய்யப்பட்டார். ‘ஷாலினி போன்ற பெண் வேண்டும் என்று எல்லா ஆண்களும் நினைக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் அஜித்தாக இருக்க வேண்டும்’ என்பதே இந்தக் கதையின் மையக் கருத்து. ஒரு நல்ல வேலையில் உள்ள இளைஞன், தன்னைத் தகுதியானவராக மாற்றிக் கொண்டு விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முயலும் பயணமே இந்தக் கதையாகும்” என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading