நடிகர் கென் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவனாக வரும் கதாநாயகன், காதலையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவதால், படிப்பிலும் பள்ளி வாழ்க்கையிலும் பின்னடைவை சந்திக்கிறார். இதனால், மோசமான மாணவன் என்ற பெயரையும் பெறுகிறார். பின்னர், பெற்றோரின் உழைப்பையும் துன்பங்களையும் உணர்ந்து, தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் விதமாக கதை நகர்கிறது.
நகைச்சுவை நிறைந்த காட்சிகள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்த இந்த திரைப்படம், பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.35 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கென் மற்றும் ‘யூத்’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இதற்கு முன்பு நடிகர் சிலம்பரசனும் படக்குழுவினரை அழைத்து வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
