திரைப்படங்களில் சில நடிகர்கள் ஆபத்தான அல்லது சவாலான காட்சிகளில் நேரடியாக ஈடுபடாமல், தங்களைப் போன்ற தோற்றமுடைய ஒருவரை மாற்று நடிகராக நடிக்கச் செய்வார்கள். இவ்வாறான மாற்று நடிகர்கள் டூப் அல்லது ‘ஸ்டன்ட் டபுள்’ என்று அழைக்கப்படுகின்றனர். பல திரைப்படங்களில் இது சாதாரணமாக பயன்படுத்தப்பட்டாலும், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் டூப் பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிந்துவிட்டால் அது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கும் நகைச்சுவை குறிப்புகளுக்கும் உள்ளாகும். அதனால், டபுள் பயன்படுத்தப்பட்டாலும் அது தெரியாத வகையில் காட்சிகள் படமாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் பிரபாஸ் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் கூட டபுள் பயன்படுத்தப்பட்டதாக சில காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகின்றன. பிரபாஸுக்கு மாற்றாக நடித்ததாக கூறப்படும் நடிகரின் புகைப்படமும் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல், இந்த திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த மாளவிகா மோகனனைப் போன்ற உடை அணிந்திருந்த ஒரு ஸ்டன்ட் கலைஞரின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் அவரும் டபுள் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கயிறு உதவியுடன் சண்டைக் காட்சிகளில் தானே ஈடுபட்ட வீடியோக்களை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
மேலும், டூப் குறித்த விளக்கத்தில் மாளவிகா மோகனன் கூறியதாவது, தி ராஜா சாப்’ திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் நான் நேரடியாகவே நடித்தேன். உடல் ரீதியாக சவால்களை எதிர்கொள்வதும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நடிகர்கள் தாங்களே சண்டைக் காட்சிகளில் நடித்தாலும், படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு கருதி எப்போதும் ஒரு டபுள் இருப்பார். தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் ஒத்திகைக்காக அல்லது மிக ஆபத்தான காட்சிகளுக்காக பயன்படுத்தப்படுவர். இறுதி காட்சியை நடிகர்களுடன் படமாக்குவதற்கு முன், சண்டை இயக்குநர் டபுள் கலைஞர்களுடன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். நடிகர்களால் செய்ய இயலாத அளவிற்கு ஆபத்தான காட்சிகளில் அந்த டபுள் கலைஞர்களே நடித்துத் தருவார்கள்,” என விளக்கமளித்தார்.
