தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார். தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஆண்டனி தந்தையாகவும், பேபி லிதன்யா அவரது மகளாகவும் நடித்துள்ளனர்.
இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், இசையையும் விஜய் ஆண்டனியே அமைத்துள்ளார்.
திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் பின்னணிப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளதால், வெளியீட்டுக்கான இறுதி ஏற்பாடுகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் மு.மாறன், “வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், இந்தக் கதையின் உயிர் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான நிபந்தனையற்ற பாசம், தியாகம் மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புதான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “குடும்ப ரசிகர்கள் அனைவரின் மனதையும் தொடக்கூடிய வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான தருணங்கள், பரபரப்பான ஆக்ஷன், ஆழமான கதைக்களம் என முழு குடும்பமும் ஒன்றாக ரசிக்கக்கூடிய திரையரங்க அனுபவமாக ‘அப்பா குட்டி’ அமையும். விஜய் ஆண்டனியின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். விரைவில் ரசிகர்கள் முன்னிலையில் படத்தை கொண்டு வர உள்ளோம்” என்றார்.
