தமிழில் ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய அவர், தற்போது இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதியுடன் இணைந்து ‘மை டியர் சிஸ்டர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்தா மோகன்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “புற்றுநோய் என்ற பெரிய சவாலில் இருந்து மீண்டு வந்த பிறகு, மீண்டும் நடிப்பில் முழுமையாக ஈடுபடத் தயாரானேன். அந்த காலகட்டத்தில் எனது மனதில் காதல் உணர்வு தோன்றியது. ஒரு பிரபல நடிகருடன் நெருக்கமாக பழகி, அவருடன் வெளியே சென்றேன். பின்னர் தான் அவர் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது எனக்கு தெரியவந்தது. அந்த உண்மை வெளிப்பட்டபோது என் மனம் மிகவும் உடைந்தது. ஒரு பெண்ணின் நம்பிக்கையை இவ்வாறு சிதைக்க எப்படி மனம் வருகிறது என வேதனைப்பட்டேன். இதுகுறித்து அந்த நடிகரிடம் கேட்டபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். ஆனால் எனக்கு அது எளிதான விஷயமாக இல்லை.
எனது முன்னாள் கணவர் பிரஜீத் ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்தபோது திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அதற்கு நான், ‘என் பெற்றோரிடம் பேசுங்கள்’ என்று கூறினேன். அதன்பிறகே எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமண பந்தத்தின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. அது ஒருபோதும் மறையாது. இப்போதும் சரியான புரிதல் கொண்ட ஒருவரை சந்தித்தால், மீண்டும் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கத் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
