தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சில நாட்களுக்கு முன்பு நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில், நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை திரிஷா, தனது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் மூலமாக ஒரு அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மாநில அரசியலில் உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரிடமிருந்து இவ்வாறு இழிவான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகள் வெளிவரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. மேலும், அரசியலில் இணையும் எண்ணமும் எனக்கில்லை. இதற்கு முன்பும் நான் பலமுறை கூறியதுபோல், அரசியல் தொடர்பான விவகாரங்களில் நான் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.
என்னைப் பற்றிய மதிப்பீடு என் கலைத்திறன் மற்றும் தொழில்முறை சாதனைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதப் பொருளாக்குவது ஒழுக்கநெறிக்குப் புறம்பானது. உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு சம்பந்தமில்லாத விவகாரங்களில் பயன்படுத்த வேண்டாம், என்று திரிஷா தெரிவித்துள்ளார்.
