இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன், சுனைனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தயாரிப்பாளராக தாணு பணியாற்றியிருந்தார்.
இந்தப் படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் தோன்றினார். படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்களிடையிலும் கவனம் பெற்றது. வசூல் தரப்பிலும் குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்தது. பின்னர் இந்த திரைப்படம் இந்தியில் வருண் தவான் நடித்த ‘பேபி ஜான்’ என்ற பெயரில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது.
‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ஜனவரி 15ஆம் தேதி வெளியாக இருந்த ‘தெறி’ திரைப்படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘தெறி’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
