தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 2016–2022ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014–2022ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.
இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட சூர்யா, தனுஷ், கார்த்தி, ஆர்.பார்த்திபன், ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
சிறந்த நடிகர் / நடிகைகள் (2016–2022):
சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, விக்ரம் பிரபு, விருது பெற்றனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் விருது பெற்றனர்.
சிறந்த திரைப்படங்கள்:
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் அந்தந்த ஆண்டுக்கான சிறந்த படங்களாக பாராட்டப்பட்டன. 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை ‘மாநகரம்’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பெற்றார். ‘தரமணி’ படத்திற்காக ராம் சிறந்த உரையாடல் ஆசிரியராகவும், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்காக எச். வினோத் சிறந்த கதாசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
2018ஆம் ஆண்டு ‘வடசென்னை’ படத்திற்காக சமுத்திரக்கனி சிறந்த வில்லன் நடிகராகவும், அமீர் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விருது பெற்றனர். அதே படத்திற்காக சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். ‘மோகினி’ படத்திற்காக யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகராக கௌரவிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். சூரரைப்போற்று படத்திற்காக இயக்குனர் சுதா கொங்கரா சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். சிறப்பு பிரிவில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததற்காக நடிகர் பசுபதி விருது பெற்றார். கனா படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதை நடிகர் சிவகார்த்திகேயனும், வாயாடி பெத்தபுள்ள பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி விருதை நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பெற்றார்.
சின்னத்திரை விருதுகள் (2014–2022):
சிறந்த கதாநாயகர்களாக எம். ராஜ்குமார், ஆர். பாண்டியராஜன், கெளசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ. சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த கதாநாயகிகளாக ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, ஷபானா ஷாஜகான், கேப்ரயெல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் விருது பெற்றனர்.
சிறந்த நெடுந்தொடர்களாக ‘அழகி’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘ராமானுஜர்’, ‘நந்தினி’, ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’, ‘ராசாத்தி’, ‘சுந்தரி’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய தொடர்கள் தேர்வு செய்யப்பட்டன.
சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம், மூன்றாம் பரிசு ₹75,000 வழங்கப்பட்டது. பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படங்களுக்கு ₹1.25 லட்சம் சிறப்புப் பரிசும் அளிக்கப்பட்டது சின்னத்திரை பிரிவில் சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சுவாமிநாதன் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது விழா, தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையின் பல ஆண்டுகால பங்களிப்புகளை ஒருங்கிணைத்து கௌரவித்த சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
