நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாக கூறி காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை அபிராமியும் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஜந்தர் மந்தரில் நடைபெறும் சம்பவங்கள் தனது மனதை மிகவும் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் வெயிலில் நின்றபடியே தங்களது குரல் கேட்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, “அவர்களில் என் குழந்தையும் இருந்தால் என்ன செய்வேன்?” என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் உழைத்து, விதிமுறைகளை பின்பற்றி தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அமைதியான முறையில் தங்கள் கோரிக்கையை முன்வைக்க வந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு கிடைத்த பதில் லத்தியும் மௌனமும்தான் என்றும் அபிராமி வேதனை தெரிவித்துள்ளார். எல்லா பிரச்சினைகளுக்கும் தன்னிடம் பதில் இல்லாவிட்டாலும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதன் அவசியத்தை தனது குழந்தை உணர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், போராட்டத்தில் நிற்கும் ஒவ்வொருவருடனும் தாம் இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
—
