கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படம் வெளியாகியது. சுமார் ரூ.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலகம் முழுவதும் ரூ.75 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் பின்னர் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் இப்படம் உருவாக்கப்பட்டு வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’ வெளியானது. இந்த இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது. இந்தி பதிப்பில் விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அவருடன் தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
மலையாள பதிப்பில் மோகன்லால் மற்றும் மீனா மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
