தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ள ஹிப்ஹாப் ஆதி, தனது வெற்றிப் படமான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புடன் பகிர்ந்துள்ள பதிவில், ‘மீசைய முறுக்கு’ தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத படைப்பாக அமைந்ததாக ஆதி குறிப்பிட்டுள்ளார். ஒரு கனவாகத் தொடங்கிய அந்த முயற்சி, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பால் உணர்வுபூர்வமான நினைவாக மாறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு மற்றும் இசைக் கனவுகளை மையமாகக் கொண்டு உருவாகி வணிக ரீதியிலும் வெற்றிபெற்றது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1980-களையும் தற்போதைய காலத்தையும் இணைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பாரம்பரிய இசை குறித்த பழமைவாத எண்ணங்களை எதிர்த்து போராடும் இளம் இசைக்கலைஞராக அவர் தோன்றவிருப்பதும் படத்தின் முக்கிய அம்சமாகும்.
முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள நிலையில், நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான ‘பப்பாளி பழமே’, ‘ஆரா 10/10’ பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
—
