72-வது தேசிய திரைப்பட விருதுகளைச் சுற்றிய விவாதங்கள் தொடரும் நிலையில், இயக்குநர் எச்.வினோத் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், நடிகர் தனுஷ் தேசிய விருதுக்கு முழுமையாக தகுதியானவர் என்றும், தகுதியான ஒருவருக்கு விருது கிடைக்கும் போது அதை கேள்விக்குட்படுத்துவது தேவையற்ற விவாதம் என்றும் குறிப்பிட்டார். ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறப்புநடுவர் விருதையும் பெற்றிருந்தார்.
தேசிய விருதுகள் பணம் அல்லது செல்வாக்கின் மூலம் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். தாம் அத்தகைய தகவல்களை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்றும், தேர்வுமுறை பெரும்பாலும் நியாயமானதாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், விமர்சனங்கள் இருந்தால் அவை தேர்வுமுறையை மேம்படுத்த உதவும் வகையில் இருக்க வேண்டும்; நடுவர் குழுவின் நேர்மையை சந்தேகிக்கும் விதமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார். ஒரு திரைப்படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அது இந்தியா முழுவதும் சரியான முறையில் சென்றடைய தயாரிப்பாளர்களும் படக்குழுவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எச்.வினோத்தின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
