‘ஜப்பான்’ திரைப்படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான் காரணம் – இயக்குனர் ராஜூ முருகன்!

சசிகுமார் மற்றும் சைத்ரா ஆகியோர் நடித்துள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்திய ஒரு பேட்டியில், கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய ‘ஜப்பான்’ திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜூ முருகன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் அனைவரையும் நம்பித்தான் செயல்படுகிறோம். தயாரிப்பாளர், நடிகர் என அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து தான் படம் எடுக்கிறோம். ஆனால் சில நேரங்களில் ஏதோ ஒன்று தவறிவிடுகிறது. ‘ஜப்பான்’ படத்தின் கதையை நான் முதலில் எட்டு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸாக எழுதினேன். அது பல கதாபாத்திரங்கள் இணையும் ஹைப்பர் லிங்க் கதை வடிவில் இருந்தது. அந்த கதையை தயாரிப்பாளர் படித்த பிறகு, ‘இதை ஒரு திரைப்படமாக எடுக்கலாமே என்று கேட்டார்.

அந்தக் கதையை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றியபோது, நான் முதலில் நினைத்த விதத்தில் அதை உருவாக்க முடியவில்லை. ‘ஜப்பான்’ படத்தில் நடந்த அனைத்துக்கும் முழுப்பொறுப்பும் என்னுடைய தவறுதான். அந்தத் தோல்வியை யார் மீதும் சுமத்த விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால், கார்த்தி சார் அந்தப் படத்தில் கடைசி வரை என்னுடன் துணை நின்றார். அந்தப் படத்தில் செய்த சில பரிசோதனை முயற்சிகளுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். தயாரிப்பு நிறுவனமும் நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தது.

இருப்பினும், கார்த்தி சார் போன்ற பெரிய நடிகர் நடித்த படம் என்பதால், அவருக்கேற்ற விஷயங்களை நான் சரியாக வழங்க வேண்டும் என்ற மன அழுத்தம் எனக்கு இருந்தது. சினிமாவில் ஒரு வியாபார அமைப்பு உள்ளது. வியாபார ரீதியில் படம் வெற்றி பெற்றால் மட்டுமே மரியாதையும், அடுத்த வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இப்போது நான் புரிந்துகொண்டது என்னவென்றால், கதை என்ன கேட்கிறதோ, அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்கு மேல் தேவையற்ற முயற்சிகள் செய்யக்கூடாது என்று ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading