விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படம், வரும் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான திரையரங்கு வினியோக உரிமை 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக வெளியான தகவல், தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு படத்தின் மாநில உரிமை இத்தனை பெரிய தொகைக்கு விற்பனையானது என்பதே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
யஷ் நடித்த ‘கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். அந்தப் படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் மொத்தமாக சுமார் 130 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அந்தப் படத்தின் வியாபாரம் சுமார் 75 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும், நிகர வசூலாக தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது சுமார் 80 கோடிக்கும் சற்றே அதிகமான தொகை மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், படத்தால் கிடைத்த மொத்த லாபம் சுமார் 5 கோடிக்கு சற்றே அதிகம் தான் என்கிறார்கள். இத்தகைய சூழலில், ‘டாக்சிக்’ படத்தின் வியாபாரம் மட்டுமே 120 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது என்பது தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
