தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித் குமார், நடிப்பில் மட்டுமல்லாமல் கார் ரேசிங்கிலும் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கார் ரேசிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று, தீவிரமாக பயிற்சி மற்றும் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கார் ரேசிங்கில் ஈடுபட்டிருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் தனது ரசிகர்களை சந்திப்பதை அஜித் குமார் வழக்கமாக கொண்டுள்ளார். கார் ரேசிங் போட்டிகளை பார்ப்பதற்காக மட்டுமின்றி, நடிகர் அஜித் குமாரை நேரில் காண வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் பெருமளவில் திரளுகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
ரசிகர்களின் ஆதரவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியமான வட்டத்திலிருந்து வெளியே வந்து புதிய விஷயங்களில் ஈடுபடும்போது, அவர் அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பதுபோன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆம், நானும் அவற்றை எதிர்கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
மேலும் அவர், மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் இருந்து என்னை ஆதரிக்கும் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மனப்பூர்வமான நன்றி. சர்கியூட் ஆஃப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் சுமார் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். இது நான் சரியான பாதையில் பயணித்து வருகிறேன் என்பதை எனக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் இதை யாருக்காகவும் செய்வதில்லை எனக்காகவே செய்கிறேன். இந்த விளையாட்டின் மீது எனக்கு அளவுக்கு மீறிய காதல் உள்ளது. என்னால் முடிந்தவரை நீண்ட காலம் ஒரு பந்தய ஓட்டுநராக தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று தெரிவித்துள்ளார்.
