ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற ஜீவா சங்கர், முன்னதாக ‘நான்’, ‘அமரக்காவியம்’, ‘எமன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்னர் சுமார் ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அதர்வா, வாணி போஜன், ரூபா மஞ்ஜரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா சங்கர் இயக்கும் படம் என்பதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டாக தற்போது தலைப்பும் டீசரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘வலை’ என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் வெளியீடு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் தலைப்பும், டீசரில் இடம்பெற்ற காட்சிகளும் படத்தின் கதை உலகம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் அதர்வா ‘குட்டி’ மற்றும் ‘சாரா’ என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கடல் மற்றும் மீனவர்கள் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு, பழிவாங்கலை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகியிருப்பது டீசரைப் பார்க்கும் போது தெளிவாக புரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ராஜ் இசையமைத்துள்ளார். டீசரில் இடம்பெற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, படப்பிடிப்பு பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், ‘விரைவில் வெளியீடு’ என டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளதால், படம் சீக்கிரம் திரையரங்குகளை அடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
