‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ‘கொடி’, ‘டிராகன்’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ‘கிரேஸி கல்யாணம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பத்ரப்பா காஜுலா இயக்கியுள்ள இப்படத்தில் விகே நரேஷ், தருண் பாஸ்கர், அகில் ராஜ் உட்டேமாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரோ சினிமாஸ் சார்பில் பூசம் ஜெகன் மோகன் ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.திருமணத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் அனுபமா, ‘கீர்த்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகளுக்கு பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைக்க தந்தை முயற்சிக்கும் நிலையில், கீர்த்தி தனது விருப்பத்தை நிறைவேற்ற போராடுவதால் உருவாகும் குடும்பச் சூழல்கள் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் படக்குழு தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதலில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி இரண்டு வாரங்கள் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘கிரேஸி கல்யாணம்’ திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
