அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இப்படம் காதலை மையமாகக் கொண்ட கதையுடன் பல்வேறு ஜானர்களை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன், படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். கடுமையான போட்டிக்கு மத்தியில் படம் வெளியானாலும், தற்போது லாபகரமான நிலையை எட்டியிருப்பதாகக் கூறிய அவர், மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல் நேரடியாக திரையரங்கில் படத்தைப் பார்த்து தங்களது கருத்தை உருவாக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
‘அன்பில் அவன்’ படத்தில் சில குறைகள் இருக்கலாம் என்றாலும், அதன் உணர்வும் நோக்கமும் சரியான இடத்தில் இருப்பதாக தான் நம்புவதாக அசோக் செல்வன் தெரிவித்தார். காதல் கதையாக ஆரம்பித்து பின்னர் த்ரில்லர், ஆக்ஷன் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படம் பார்த்த பலர் உணர்ச்சிவசப்பட்டதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.. தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களை சென்றடையும் என நம்புவதாகவும் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
