ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அபிக்ஷா போர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘ஹனிமூன் போட்டோகிராபர்’, ‘சால்ட் சிட்டி’, ‘பதாய் தோ’ உள்ளிட்ட படங்களிலும், ‘உண்டேகி’ வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’வில் வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் ஆக்ஷன் பின்னணியில் அபிக்ஷா போர்வால் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் கதாபாத்திரத்திற்கு ஆதரவாக களமிறங்கும் அதிரடிப்படை வீராங்கனையாக அவர் நடிப்பதாகவும், அவருக்காக இரண்டு முக்கிய சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ‘மிஸ் திவா’ மற்றும் ‘மிஸ் டெல்லி’ பட்டங்களை வென்றுள்ள அபிக்ஷா, தற்காப்புக் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். அதேபோல் கதக் நடனத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். இதனால் ‘ஜெயிலர் 2’ மூலம் அவரது ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களிடம் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
