கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரச்சிதா ராம். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ரசிகர்களை நேரில் சந்தித்த ரச்சிதா ராம், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்த பின்னர், எதிர்பாராத விதமாக ரச்சிதாவின் இரு கன்னங்களையும் கைகளால் கிள்ளி கொஞ்சினார்.
ரசிகரின் இந்த திடீர் செயலை சற்றும் எதிர்பாராத ரச்சிதா ராம், ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிரித்தபடி அந்த தருணத்தை கடந்து சென்றார். இந்த சம்பவம் இடம்பெற்ற வீடியோ காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
