சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. மேலும், வெற்றிமாறனுக்கும் அனிருத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், லிடியன் நாதஸ்வரம் இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “பிறருக்குச் சொந்தமான அரியணையைக் கேட்கவோ, பகிர்ந்துகொள்ளவோ நான் விரும்பவில்லை. அனிருத் அண்ணன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். எங்களது திருக்குறள் பாடல் உருவாக்கத்தில் அவர் அளித்த பங்களிப்புக்கு நன்றி.
தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க ஆவலாக இருக்கிறேன். அதற்கான சரியான நேரம் வரும் என நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் சார் எங்கள் வீட்டிற்கு வந்து நல்ல செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அவருக்கு மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம், அனிருத்துக்குப் பதிலாக ‘அரசன்’ படத்தில் தான் இணைந்துள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு லிடியன் நாதஸ்வரம் விளக்கம் அளித்துள்ளார்.
