நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு சமீபத்தில் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்நிலையில், மகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதை எதிர்த்து அர்ஜுன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது இளைய மகளின் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், மூத்த மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த விவாதங்களில் அவரது தனியுரிமையை மதித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும் உரிமை இருப்பதாகவும், ஐஸ்வர்யா விரும்பினால் சரியான நேரத்தில் தனது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஒரு தந்தையாக தனது மகளின் குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எந்த ஆதாரமும் இல்லாமல் தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று குறிப்பிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபலங்களின் வாழ்க்கை குறித்து விமர்சனங்கள் வருவது இயல்பானது என்றாலும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதற்கும் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கும் அது அனுமதி அளிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். தங்களது அமைதியை தவறான தகவல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளைப் பிரபலப்படுத்துவதற்காக உண்மைத் தன்மையை ஆராயாமல் தனிப்பட்ட தாக்குதல்களைப் பரபரப்பாக்கும் சில ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு தந்தையாக மகளின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்க எப்போதும் துணை நிற்பேன் என்றும் கூறியுள்ளார். இனியும் இதுபோன்ற அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ள அர்ஜுன், எந்தப் பெண்ணும் தனது வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தபடி வாழ்வதற்காக மற்றவர்களிடம் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
