வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்ற ‘பயர்’ என்ற கானா பாடலும், சிம்புவின் கதாபாத்திரமான ‘தாஸ்’ அறிமுகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், ‘அரசன் வேர்ல்டு’ கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அனிருத் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மறுத்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. உங்கள் கற்பனைகளுக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
