சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலைப்பணிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். தமிழர்களின் கலைப் பெருமைகளில் சிவாஜி கணேசனும் முக்கியமானவர் என அவர் குறிப்பிட்டார். சிவாஜியின் கம்பீரமான குரல் மூலம் தமிழ் பேசும் பாமர மக்களிடமும் சரியான உச்சரிப்பு சென்றடைந்தது அவரது முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று என்று வைரமுத்து தெரிவித்தார். வரலாற்று நாயகர்கள் மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கதாபாத்திரங்களை தனது நடிப்பின் மூலம் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் அவர் புகழ்ந்தார்.
சிவாஜி கணேசனின் நினைவு தலைமுறைகளை கடந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவரது திரைப்படங்கள் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் வைரமுத்து கூறினார். குறிப்பாக ‘பராசக்தி’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற படங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தமிழ் உச்சரிப்பு மற்றும் மொழியின் சிறப்பை கற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய பணியை தனி கலைஞராக சிவாஜி கணேசன் தமிழுக்காக செய்துவிட்டுச் சென்றுள்ளதாகவும், அவரது புகழையும் பெருமையையும் தமிழ் சமூகம் தொடர்ந்து நினைவுகூர வேண்டும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.
—
