சந்தீப் கிஷன் நடிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜேசன் சஞ்சயின் புதிய பயணத்திற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூர்யா தனது எக்ஸ் பதிவில், சிறுவனாக பார்த்த சஞ்சய் தற்போது இயக்குநராக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ வெளியாகும் நாளை முக்கியமான நாளாக குறிப்பிட்டு, ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன், லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கார்த்தியும் சஞ்சய் சினிமாவை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். எளிமையும் வசீகரமும் கொண்ட சஞ்சய்க்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் ரசிகர்களின் அன்பு கிடைக்க வேண்டும் என்றும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். மேலும் சந்தீப் கிஷன் மற்றும் ‘சிக்மா’ படக்குழுவினருக்கும் படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
