கோவையில் நடைபெற்ற முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கோவையுடனான தனது தொடர்பு மற்றும் காவல்துறையை மையமாக வைத்து தான் நடித்த படங்களின் அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
கோவை தனக்கு மிகவும் பிடித்த ஊர் என்றும், பள்ளியில் சென்னையில் படித்தாலும் தன்னை கோவை பையன் என்றே கூறிக்கொள்வேன் என்றும் கார்த்தி தெரிவித்தார். சினிமாவில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த தனக்கு கோவை மக்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை மீது விமர்சனங்கள் இருக்கலாம் என்றாலும், நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் இருப்பதால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்று கார்த்தி தெரிவித்தார். சமூக வலைதளங்களின் தாக்கம் காவல்துறையிலும் அதிகரித்துள்ளதாகவும், குற்றச்சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும்போது அவற்றின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பொதுமக்கள் தரும் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் காவல்துறையினரால் ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் கார்த்தி குறிப்பிட்டார். காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அது நடைமுறையில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
