Advertisement

“நடிகர் சங்க புதிய கட்டடம் டிசம்பரில் திறப்பு!” – நடிகர் சங்கத்தின் 70-வது பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (செப்., 27) நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக, சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவது, நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகள், உறுப்பினர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மூத்த நடிகை லதாவுக்கு சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாகக் கூறப்படும் ஒன்பது பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இனி பாதிக்கப்படும் உறுப்பினர்களும் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில் புதிய பட்டறைகள் உருவாக்கப்படும் என்றும் நாசர் கூறினார். நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்றும், எதிர்காலத்தில் அந்தக் கட்டடத்தை முறையாகப் பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பொருளாளர் கார்த்தி பேசும்போது, நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதில் ஏற்பட்ட சிரமங்களை குறிப்பிட்டார். இன்னும் 45 நாட்களில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்றும், அதன்பிறகு ஒரு மாதம் சோதனைப் பணிகள் நடைபெறும் என்றும் கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில் புதிய கட்டடத்தை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நடிகை குஷ்பு, நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம் போன்றது என்றும், உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நடிகர் சங்க நிர்வாகம் 2028-ம் ஆண்டு வரை தொடரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சங்க உறுப்பினர்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் முறையான ஒப்பந்தம் செய்து கொள்வது கட்டாயம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

—

Add a Comment

Leave a Reply