சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘புருஷன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தபோது விஷாலுக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஷால் வெளியிட்ட தகவலில், பரபரப்பான சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையாக குணமடைய மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காயம் காரணமாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும், விரைவில் குணமடைந்து மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்ப ஆவலுடன் இருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
