சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் கலந்துகொண்டார். அப்போது தனது அடுத்த திரைப்படம் குறித்தும், சினிமா மற்றும் அரசியல் தொடர்பான தனது எண்ணங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். தனது அடுத்த படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த லெஜெண்ட் சரவணன், அந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறினார். படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலுக்கு சென்றுவிட்ட விஜய்யின் படங்களைப் போன்ற தன்மை தனது அடுத்த படத்திலும் இருக்கும் என்று கூறிய அவர், ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிப்பிட்டு அவரை பாராட்டினார். ரஜினிகாந்தை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது என்றும், அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் தொழிலில் தனக்கு முன்மாதிரியாக இருப்பதாக கூறிய லெஜெண்ட் சரவணன், கடினமாக உழைத்து நேர்மையாக செயல்பட்டால் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவதில் தவறில்லை என்று தெரிவித்த அவர், தற்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். எதிர்காலத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கலாம் என்றும், அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றும் அவர் கூறினார்.
—
