இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், அடுத்த பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பிரம்மாண்டத்துக்கு ஏற்ப இசையிலும் பெரிய கூட்டணி அமைந்துள்ளது. இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். இதனிடையே வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்த சூழலில், படக்குழு தற்போது ‘ஜெய் ஜெய் ராம்’ பாடலை ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது. ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி இடம்பெறும் ‘ராமாயணா’ படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் அரிஜித் சிங் இணைந்து பாடியுள்ளனர்.
