2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 14வது சைமா விருது விழா செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. முதல் நாளில் தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கும், இரண்டாம் நாளில் தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ அதிகபட்சமாக 6 விருதுகளை கைப்பற்றியது.
தமிழ் சினிமாவுக்கான விருதுகளில் சிறந்த படமாக ‘டிராகன்’ தேர்வானது. அந்தப் படத்திற்காக அஷ்வத் மாரிமுத்து சிறந்த இயக்குநர் விருதையும், துருவ் விக்ரம் ‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் பெற்றனர். ‘தக் லைப்’ படத்தின் ஒளிப்பதிவுக்காக ரவி கே. சந்திரனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது ‘காந்தா’ படத்திற்காக சமுத்திரக்கனிக்கும், துணை நடிகைக்கான விருது ‘மாமன்’ படத்திற்காக ஸ்வாசிகாவுக்கும் கிடைத்தது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் சிறந்த எதிர்மறை கதாபாத்திர நடிகராக தேர்வானார். ‘சிறை’ படத்தின் மூலம் அறிமுகமான எல்கே அக்ஷ்ய் குமார் சிறந்த அறிமுக நடிகர் விருதை வென்றார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் சிறந்த அறிமுக இயக்குநராகவும், ‘குடும்பஸ்தன்’ சிறந்த அறிமுக தயாரிப்பாளராகவும் கவுரவிக்கப்பட்டது. ‘டியூட்’ படத்திற்காக சாய் அபயங்கர் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். ‘சிறை’ படத்தின் ‘நீலோத்தி’ பாடலுக்காக சாரதிக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ‘இறகே’ பாடலுக்காக விஜய் யேசுதாஸுக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும் வழங்கப்பட்டது. ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடலுக்காக சுபலாஷினி சிறந்த பின்னணிப் பாடகியாக தேர்வானார்.
மக்கள் விருப்பத்தின் சிறந்த நடிகராக ‘டிராகன்’ படத்திற்காக பிரதீப் ரங்கநாதனும், விமர்சகர்கள் விரும்பிய சிறந்த படமாக ‘டூரிஸ்ட் பேமிலி’யும் தேர்வாகின. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்காக சிம்ரன் சிறந்த நடிகை – பிரபல தேர்வு விருதையும், ‘காந்தா’ படத்திற்காக பாக்யஸ்ரீ போர்ஸே சிறந்த நடிகை – விமர்சகர் தேர்வு விருதையும் பெற்றனர். நடிகைகள் பாரதி விஷ்ணுவர்தன் மற்றும் லட்சுமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
—
