சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மதிமாறன், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மண்டாடி’ படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த வெற்றிமாறன், படம் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த காலம் முதல் தனது உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாக மாறிய பிறகும், சுமார் 15 முதல் 20 படங்களின் வசூல் நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி தான் பார்த்த திரைப்படங்களில், தனது பார்வையில் முதல் ‘பிளாக்பஸ்டர்’ படமாக ‘மண்டாடி’ அமைந்துள்ளதாகக் கூறிய வெற்றிமாறன், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். படத்தை முதன்முறையாகப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வே இப்போதும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையரங்குகளில் படக்குழுவினரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், பார்வையாளர்கள் கதையுடன் தங்களை இணைத்துக் கொள்வதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், இயக்குநர் மதிமாறன், சூரி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய கதைக்களத்தை துணிச்சலுடன் கையாள்வதற்காக படக்குழுவினரை மனதார பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
