விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ பட இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். குப்பைத்தொட்டியை மையமாக வைத்து உருவான கதையுடன் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் படத்தில் இடம்பெற்றிருந்தது. சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்த இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கனாகே
பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் விஜய் சேதுபதியுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் ஓடிடியிலும் வரவேற்பை பெற்றதுடன், சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியானபோதும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ‘மகாராஜா’வை ஹாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் சுதன் தெரிவித்துள்ளார். ரீமேக் உரிமை குறித்து ஒரு ஹாலிவுட் ஏஜென்சி தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளதாகவும், இந்த பதிப்பில் பிரபல நடிகர் மேத்யூ மெக்கனாகேவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹாலிவுட் ரீமேக் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
