“பாலிவுட்டில் எல்லாமே கார்ப்பரேட் பாணி”.. பிருத்விராஜ் சொன்ன வித்தியாசம்!

மலையாள சினிமாவின் இயல்பான அணுகுமுறையைப் பற்றி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பேசியுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், மலையாள திரையுலகத்திடம் இருந்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெரிய படங்களை உருவாக்கினாலும் மலையாள சினிமாவில் இருக்கும் எளிமையான பணிச்சூழல் குறித்து விளக்கியுள்ளார்.

மலையாள சினிமாவின் பட்ஜெட்டும் தயாரிப்பு அளவும் தற்போது பெரிதாகி வருவதாக குறிப்பிட்ட பிருத்விராஜ், 15 நாட்களில் ரூ.5 கோடி செலவில் மட்டுமே படங்கள் உருவாக்கப்படுவதில்லை என்றும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 150 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தி பிரமாண்டமான படங்களையும் உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். இருந்தாலும், படத்தை உருவாக்கும் விதத்தில் இருக்கும் எளிமையும் இயல்பும் மாறவில்லை என்றும், அதுவே கதாபாத்திரங்களுக்கும் சினிமாவுக்கும் உண்மையான மனித உணர்வை கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உதாரணமாக, இயக்குநராக தான் கரீனா கபூருடன் படம் செய்ய விரும்பினால் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு கதையை சொல்லலாமா என கேட்க முடியும் என்றும், அவரது பயணத் திட்டத்தைப் பொறுத்து மற்றொரு நாளில் சந்திக்கலாம் என்ற பதில் கிடைக்கும் என்றும் பிருத்விராஜ் கூறியுள்ளார். ஆனால் பாலிவுட்டில் ஒரு நடிகரை அணுகுவதற்கு முதலில் ஏஜென்சி, பின்னர் மேனேஜர் என பல கட்டங்களை கடக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகர் படத்தில் நடிக்க சம்மதித்த பிறகும் சம்பளம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏஜென்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறிய பிருத்விராஜ், பாலிவுட்டில் பெரும்பாலான விஷயங்கள் கார்ப்பரேட் முறையில் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ஒரு படத்தை உருவாக்க இதைவிட நேரடியான மற்றும் எளிமையான வழியும் இருக்கிறது என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading