ஹெச்.வினோத், சீனு ராமசாமி, ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், தற்போது ‘தி கிராண்ட் மாஸ்டர்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளை நோக்கிய போராட்டத்தையும் மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார்.
வறுமைக்கு மத்தியில் தூய்மை பணியாளராக குடும்பத்தை நடத்தும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்ற ஆசைக்கு உறுதுணையாக இருக்கிறார். சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் வாழ்க்கை சூழலுக்கு இடையே மகனின் இலக்கை நிறைவேற்ற அந்தத் தாய் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் கதையாக அமைந்துள்ளது.
வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் தவிர்த்து, சமூகத்தின் மறுபக்கத்தை பேசும் படமாக இது உருவாகியுள்ளது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. செஸ் கட்டங்களால் உருவாக்கப்பட்ட பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றனர்.
