விஷால் நடிப்பில் வெளியான ‘மகுடம்’ திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தாலும், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கலவையான வரவேற்பையே பெற்றது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை விஷாலே இயக்கி நடித்திருந்தார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்த நிலையில், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் விஷால் நடிக்கவுள்ள மற்றொரு புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கொடி’, ‘லீடர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை, தயாரிப்பு நிறுவனம் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இப்படத்தில் விஷால் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது படத்தின் முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
