விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லி தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு கார்த்திக் நேத்தா வரிகள் எழுதியுள்ளார். வழக்கமான மெலடி பாடல்களில் இருந்து மாறுபட்டு, மென்மையான இசை அனுபவத்தை வழங்கும் வகையில் ‘மகளே’ உருவாகியுள்ளது.
பாடலைக் கேட்கும் போதே 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் இசையும் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய கால இசைக்கூடம், அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரெக்கார்டிங் முறைகள் என அக்காலத்தின் இசைச் சூழலை மீண்டும் கண்முன் கொண்டு வரும் வகையில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
மகளைப் பார்த்து ஒரு தந்தை தனது மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது போன்ற உணர்வை பாடல் முழுவதும் கடத்துகிறது. மகளின் மீதான தந்தையின் பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கார்த்திக் நேத்தாவின் வரிகள், பாடலுக்கு கவித்துவமான தன்மையை கொடுத்துள்ளன. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் வரிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இதனால் ‘பத்தா’ திரைப்படம் தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
