லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019-ம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்தது. அதே நேரத்தில், தனது மகளை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் தந்தையின் உணர்வுகளையும் படம் அழுத்தமாக பதிவு செய்திருந்தது. குறிப்பாக, இறுதியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமுதாவை தில்லி முதன்முறையாக சந்திக்கும் காட்சி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது.
அந்த படத்தின் தந்தை – மகள் கூட்டணி தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரே மேடையில் சந்தித்துள்ளது. பல வருடங்களாக மகளை பார்க்க ஏங்கும் தில்லியாக கார்த்தியும், தந்தைக்காக காத்திருந்த அமுதாவாக நடித்த குழந்தை நட்சத்திரமும் மீண்டும் நேரில் சந்தித்த இந்த தருணம், ‘கைதி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இந்த சந்திப்பின்போது அமுதாவாக நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்திருப்பதை பார்த்த கார்த்தி, அதை வைத்து நகைச்சுவையாக பேசினார். “இப்படி வளர்ந்துவிட்டால் ‘கைதி 2’ படத்தை எப்படி எடுப்பது மகளே?” என அவர் கேட்டுள்ளார். இந்த கலகலப்பான தருணம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
—
