சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் முதல் பாகம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என்றும், ‘மூக்குத்தி அம்மன் 2’ தனக்கு அப்படிப்பட்ட படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் சுந்தர்.சியின் தொலைநோக்குப் பார்வை, கனிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய அவர், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்ததற்காக நன்றி தெரிவித்த நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், குஷ்பு மற்றும் சினேகாவுடன் இணைந்து பணியாற்றியதைப் பொக்கிஷமாகக் கருதுவதாகத் தெரிவித்த அவர், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது பெரும் பாக்கியம் என்றும், ரசிகர்கள் படத்தைத் திரையில் காணும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
