தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘இம்மார்டல்’ திகில் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதில் கயாடு லோஹர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார்.
மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கே. விவேக் இயக்கும் இப்படத்திற்கு ‘13’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக பவ்யா திரிகா நடிக்கிறார். இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் கதிர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இருளுக்குள் மறைந்திருக்கும் உண்மை மற்றும் 13 என்ற எண்ணுக்குப் பின்னால் உள்ள மர்மம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்கள், கற்பனை, அமானுஷ்ய அம்சங்கள் கலந்து திகிலூட்டும் வகையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை டிசம்பரில் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
