‘வேட்டை மன்னன்’ படம் நின்றுபோனதற்கு காரணம் என்ன? தயாரிப்பாளர் மகன் ஜானி விளக்கம்!

சிம்பு – நெல்சன் கூட்டணியில் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட ‘வேட்டை மன்னன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் சிம்புவுடன் ஜெய், ஹன்சிகா மோத்வானி, தீக்ஷா சேத் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். 2011-ம் ஆண்டிலேயே படத்தின் அறிமுக டீசரும் வெளியாகியிருந்தது.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ‘வேட்டை மன்னன்’ மீது அப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் திரைப்படம் கைவிடப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக இதற்கான காரணம் வெளிப்படையாக தெரியாமல் இருந்த நிலையில், சக்கரவர்த்தியின் மகனும், ‘ரேணிகுண்டா’ படத்தின் கதாநாயகனுமான ஜானி சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதன்படி, தயாரிப்பில் இருந்தபோது சிம்புவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவான படமாக ‘வேட்டை மன்னன்’ இருந்துள்ளது. அவரது தந்தை எப்போதும் ரிஸ்க் எடுப்பதைப் பற்றி தயங்காதவர் என்றும், இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்பவர் என்றும் ஜானி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த காலகட்டத்தில் தயாரித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், ‘வேட்டை மன்னன்’ படத்திற்கான முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த பிரச்சினையை சமாளிக்க, குறுகிய காலத்தில் ‘வாலு’ படத்தை தயாரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து ‘வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டதாகவும் ஜானி தெரிவித்துள்ளார். ஆனால் ‘போடா போடி’ எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ‘வாலு’ படத்தையே நிறைவு செய்வது கடினமான சூழலாக மாறியதாக அவர் கூறியுள்ளார். இருந்தபோதிலும், ‘வேட்டை மன்னன்’ படத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என தனது தந்தை தொடர்ந்து முயற்சி செய்ததாகவும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அந்த முயற்சி நிறைவேறாமல் போனதாகவும் ஜானி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading