‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் புதுமையான அனுபவத்தை கொடுக்கும்…இயக்குநர் ராம் டாக்!

நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் இயக்குநர் ராம் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படக்குழு தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இயக்குநர் ராம் படத்தின் உருவாக்கம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

படத்தின் கதை சொல்லும் விதம் குறித்து பேசிய ராம், குழந்தைகளிடம் சொல்லப்படும் கதையின் அழகும் சுவாரஸ்யமும் இப்படத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளார். அதேசமயம், கற்பனை உலகத்திற்குள் மட்டுமே செல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை உணரக்கூடிய வகையில் நிஜமான எமோஷன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நிவின் பாலியை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் ராம் விளக்கியுள்ளார். ‘பேரன்பு’ படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்த பிறகு நிவின் பாலி தன்னிடம் இணைந்து படம் செய்ய வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இம்மார்ட்டல் கதாபாத்திரத்தை எழுதும்போது நிவின் பாலியின் முகமே தனது நினைவுக்கு வந்ததாகவும், தாடியுடன் அவரைப் பார்க்கும்போது இயேசுவின் தோற்றம் நினைவுக்கு வருவதால் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என மூன்று விதமான நடிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர் நிவின் பாலி என்றும், இந்த மூன்றுமே படத்தின் கதையில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூரியை பொறுத்தவரை, அவரை பல ஆண்டுகளாக கவனித்து வருவதாக தெரிவித்த ராம், ‘வெண்ணிலா கபடிக் குழு’ காலத்திலிருந்தே அவரது நடிப்பை ரசித்து வருவதாக கூறியுள்ளார். ‘பேரன்பு’ படத்தை சூரி பாராட்டிய விதமும் தன்னை கவர்ந்ததாகவும், இருவருக்கும் இடையே எப்போதுமே நல்ல புரிதல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இக்கதையில் ஒரு இம்மார்ட்டல் மனிதருக்கு எதிராக ஒரு சாதாரண மனிதர் நிற்கும் சூழல் இருப்பதால், அதற்கு சூரிதான் பொருத்தமானவர் என முடிவு செய்ததாக கூறியுள்ளார். மேலும், சில தருணங்களில் ஹீரோவைக் காட்டிலும் சூரியின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கதையில் இடம்பெறும் காதல் பகுதியை காலத்துக்கு ஏற்ற இரண்டு வெவ்வேறு உலகங்களுடன் இணைக்க வேண்டும் என்பதும் ராமின் நோக்கமாக இருந்துள்ளது. பீரியாடிக் மற்றும் மாடர்ன் என இரு தன்மைகளையும் கொண்ட அந்தக் கதையை குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் உருவாக்க வேண்டியிருந்த நிலையில், அதற்கு அஞ்சலிதான் சரியான தேர்வாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். அதேபோல், இப்படத்தில் மனித கதாபாத்திரங்களுக்கு இணையாக எலி, யானை, குரங்கு, பூனை போன்ற விலங்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading