தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து தற்போது ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜகரம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
துபாயில் நடைபெற்ற ‘சீன்’ திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா, படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “ஜித்து மாதவன் இயக்கிய ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களைப் பார்த்தபோதே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பொதுவாக ஒரு கதையைக் கேட்கும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனால், இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது என்னால் அப்படி இருக்க முடியவில்லை. கதை சொல்லத் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். படத்தின் கதையை முழுமையாக ரசித்தேன். ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் ஜித்து மாதவன் முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகத்தை உருவாக்கியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
