“இசை எனக்குள் வந்தது இப்படிதான்” – இசைஞானி இளையராஜா OPEN TALK!

Ilaiyaraaja At The TFPC Press Meet Held Ahead Of The 'Ilayaraaja 75' Concert

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைப் பயணம் குறித்து உருக்கமாகப் பேசினார். இசையைக் கற்றுக்கொடுக்க தனக்கு யாரும் இல்லாத நிலையில், இசை மீதான தாகத்தால் தானாகவே கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தனது இசையுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு உண்மை சம்பவத்தையும் இளையராஜா பகிர்ந்துகொண்டார். ஜெர்மனியில் வசித்து வந்த தமிழ் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் திடீரென நின்றதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் இளையராஜாவின் இசையை அவருக்குக் கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்தப் பெண்ணுக்கு, மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் உயிர் இருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். இது உண்மையில் நடந்த சம்பவம் என்றும் கூறிய இளையராஜா, அதற்காக தான் பெருமைப்படுவதில்லை என்றும், இசையமைப்பது தனது பணி என்றும் தெரிவித்தார். அந்த சக்தியை கடவுள் தனக்கு வழங்கியிருக்கிறார்; சரஸ்வதி தனக்கு கொடுத்த பணியை மட்டுமே தான் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

தனது ஆரம்ப கால வாழ்க்கையையும் நினைவுகூர்ந்த இளையராஜா, காடு, மேடு, முள்ளுக்காடு என மிகவும் எளிமையான சூழலில் வளர்ந்ததாகத் தெரிவித்தார். உலகின் தலைசிறந்த இசை மேதைகள் பலரும் சிறு வயதிலிருந்தே பியானோவை பார்த்தும் கற்றும் வளர்ந்தவர்கள். ஆனால், தான் முதன்முறையாக பியானோவை பார்த்ததே 27 வயதில் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வித்தியாசத்தை வைத்து தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர் என கூற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், தனது இசையின் தனித்துவம் குறித்து பேசும்போது இளையராஜா மிகவும் வெளிப்படையாக தனது பெருமிதத்தை பதிவு செய்தார். “எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை” என்று கூறிய அவர், இதை கர்வமாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்றும் தெரிவித்தார். அத்தகைய தனித்துவமான இசையுடன் தற்போது மாரி செல்வராஜுடன் இணைந்து ‘மஞ்சணத்தி’ படத்திற்காக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading