தமிழில் ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன், ஆரத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய லைலா’. இப்படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அப்சரா ராணி நடிக்க, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி, சரத், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கான இசையை சி.சத்யா கவனிக்கிறார். வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகிறது. குறிப்பாக, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ரெஜித் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமும் இது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது
இப்படம் குறித்து பேசிய பிரபு, தனது தந்தைக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார்களோ, அதேபோல் தனக்கும் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்கி வருவதாக குறிப்பிட்டார். தனது மகன் விக்ரம் பிரபுவுக்கும் ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவையும் சுட்டிக்காட்டிய அவர், அதே வரிசையில் ‘அழகிய லைலா’ படக்குழுவுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்ற பெருமைக்கு ஏற்ப, கேரளாவிலிருந்து தமிழில் படம் இயக்கவும் தயாரிக்கவும் வந்துள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் என முழு படக்குழுவையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்றும் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
—
