சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் ஒன்றில் நடிகை பூர்ணா ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள பூர்ணா, தனது சிறுவயது கனவு நனவாகியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது அனுபவத்தை பகிர்ந்த பூர்ணா, “திரையுலகில் இருக்கும் பலருக்கும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். நானும் சிறுவயதில் ‘படையப்பா’ திரைப்படத்தின் ‘மின்சார கண்ணா’ பாடலை பார்க்கும்போதெல்லாம், அதில் ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கு பதிலாக நான் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். பல்வேறு மேடைகளிலும் அந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். ஆனால், ஒரு நாள் ரஜினி சாருடன் சேர்ந்து அதேபோன்று ஒரு பாடலில் நடனமாடுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்துடன் நடனமாடிய அனுபவத்தை தனது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக குறிப்பிட்டுள்ளார். “எனது கனவு தற்போது நிஜமாகியுள்ளது. முதல் ஷாட் முடிந்தவுடன் ரஜினி சார் என்னுடைய கண்களைப் பற்றி பாராட்டி பேசினார். ஏராளமான முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள ஒரு சூப்பர் ஸ்டாரிடம் இருந்து எனக்கு கிடைத்த அந்தப் பாராட்டு மிகவும் பெரிய விஷயமாகும். அந்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது” என்று பூர்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
—
