சூரியின் ‘மண்டாடி’ படத்தின் ‘கை வளவி குலுங்க’ பாடல் வெளியீடு!

காமெடி கதாபாத்திரங்களில் தொடங்கி கதாநாயகனாக உயர்ந்து, தனது நடிப்பால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளவர் சூரி. ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர், தொடர்ந்து ‘ஜில்லா’, ‘ரஜினிமுருகன்’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கதையில், அவர்களுக்கு இடையே நடைபெறும் படகுப்போட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், ‘மண்டாடி’ படத்திலிருந்து வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. ஏற்கெனவே ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ ஆகிய பாடல்கள் வெளியான நிலையில், குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதையடுத்து படத்தின் புதிய பாடலான ‘கை வளவி குலுங்க’ வெளியாகியுள்ளது. சத்யன் மகாலிங்கம் மற்றும் சுகந்தி இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஜெயஸ்ரீ மதிமாறன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading