மர்மமும் அமானுஷ்யமும் கலந்த எம்.எஸ்.பாஸ்கரின் ‘விடியும் காத்திரு’!

திரைப்பட இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரின் படங்களுக்கான கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தற்போது இயக்குநராக தனது முதல் படத்தை உருவாக்கியுள்ளார். ‘விடியும் காத்திரு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்‌ஷன் ஹொவுஸ் நிறுவனம் சார்பில் பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள இப்படத்தில் அம்ஜதா ஷெரின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், கோபி அயோத்தி காவலர் கதாபாத்திரத்திலும், பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கொலை சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குள் இரண்டு காவல் அதிகாரிகள் செல்லும்போது அங்கு எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் க்ரைம் திரில்லர் கதையுடன் திகில் அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதில் கதவின் பெரிதாக்கப்பட்ட சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் காணப்படும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகமும் படத்தின் மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்க, ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘விடியும் காத்திரு’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading