முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே, இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், விரைவில் கதாநாயகனாகவும் திரையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘சிக்மா’ படத்தில் ஜேசன் சஞ்சயுடன் இணைந்து பணியாற்றியுள்ள சந்தீப் கிஷன், அவரைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஜேசன் சஞ்சய் இயக்குநர் பொறுப்பை தேர்வு செய்வதற்கு பதிலாக நடிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், தனது அறிமுகப் படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார். ஆனால், நடிப்பில் கால்பதிப்பதற்கு முன்பாக இயக்குநராக தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் ஜேசன் சஞ்சயின் விருப்பம். அவரது முதல் படமான ‘சிக்மா’ வெற்றி பெற வேண்டும்” எனப் பேட்டி ஒன்றில் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
