தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘காஞ்சனா’, ‘24’, ‘சைக்கோ’, ‘இருமுகன்’, ‘இட்லி கடை’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நித்யா மேனன். விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து, ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் சில காலம் அமைதியாக இருந்த நித்யா மேனன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனம் சார்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நித்யா மேனன் தனது கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் அவரே கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். பேண்டஸி டார்க் காமெடி களத்தில் உருவாகும் இப்படத்தை டிகே இயக்குகிறார்.
இயக்குநர் டிகே ஏற்கெனவே கிருஷ்ணா, ஓவியா நடிப்பில் வெளியான ‘யாமிருக்க பயமே’, ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’, வைபவ், வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘காட்டேரி’, காஜல் அகர்வால் நடித்த ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். ‘24’ படத்தை இயக்கியவர் விக்ரம் கே.குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. ஏற்கெனவே நயன்தாரா, சார்மி உள்ளிட்ட நடிகைகள் தயாரிப்பாளர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் நித்யா மேனனும் இணைந்துள்ளார்.
—
